விவசாயிகள் ஊரடங்கு காரணமாக தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உள்ள நவீன சேமிப்புக் கிடங்குகளில், தங்களது விளை பொருள்களை 180 நாள்கள் வரை விவசாயிகள் வைத்துக் கொள்ளலாம்.
அந்த விளை பொருள்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கும்போது, அங்கிருந்து எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம். விளை பொருள்களின் சந்தை மதிப்பில் 75 விழுக்காடு அல்லது மூன்று லட்ச ரூபாய்க்கு கீழாக இருந்தால், அவற்றை ஆறு மாத கால அளவிற்கு நவீன கிடங்குகளில் வைத்து ஐந்து விழுக்காடு வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை நவீன சேமிப்புக் இடங்களில் வைத்து பாதுகாக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அழுகக்கூடிய விளை பொருள்களை இவற்றில் வைத்து பாதுகாக்கலாம்.
இதையும் படிங்க:கறுப்பு பூஞ்சையால் நோயாளி மரணம்? - சுகாதாரத் துறை மறுப்பு!