சென்னை: சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் சாலையைச் சேர்ந்தவர், சிவனேஷ் ஜோகன்(36). இவர் மெட்ரோ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் சிவனேஷ் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் சினிமா இயக்குநர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி KKR படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், தயாராக உள்ள திரைப்படம் ஒன்றிற்கு இசையமைப்பாளராகத் தான் நியமிக்கப்பட்டதாகவும், அதற்கு சம்பளத் தொகையாக ரூ.10 லட்சம் பேசப்பட்டு, முன்பணம் 2 லட்ச ரூபாயினை பெற்றுக்கொண்டு படத்திற்கான இசையைத் தயார் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர், தன்னிடம் அனுமதி பெறாமல் இசை கோப்புகளை யாரிடமும் தரக்கூடாது என தன்னிடம் தெரிவித்துச் சென்றதாகவும், கடந்த 3ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்த இயக்குநர் சக்திபாலாஜி படத்திற்கு இசையமைத்த கோப்புகளைத் தருமாறு கேட்டார். அதற்குப் படத் தயாரிப்பாளரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தினமும் இயக்குநர் சக்திபாலாஜி இசை கோப்புகளைக்கேட்டு, தனக்குத்தொல்லை கொடுத்து வந்ததாகவும், பின்னர் கடந்த 3ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்த சக்தி பாலாஜி ஆபாசமாகப் பேசி தன்னை மிரட்டிவிட்டுச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இயக்குநர் சக்திபாலாஜி, அவரது ஃபேஸ்புக்கில் சிறிய பட்ஜெட் படங்களின் இயக்குநர் வாழ்வை இசையமைப்பாளர் ஜோகன் சிவனேசன் கெடுக்க நினைப்பதாகவும், அவரை எந்த இயக்குநரும் அணுக வேண்டாம் எனவும் காசை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுவார் எனப் பதிவிட்டு அவதூறு பரப்பியுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த இசையமைப்பாளர் தன் மீது அவதூறாக இயக்குநர் சக்திபாலாஜி பதிவிட்டதை சுட்டிக்காட்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் இயக்குநர் சக்திபாலாஜியை விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பி இருப்பதாக கோடம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்டத் தகராறில் படத்திலிருந்து இயக்குநர் சக்தி பாலாஜி நீக்கப்பட்டதாகவும் அதனால் தான் சக்தி பாலாஜி தகராறில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:'மாமன்னன்' படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் மாரி செல்வராஜ்