சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் அணி, முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பல்வேறு வழக்குகள், சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று (நவ.20) தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் முதலில் வாக்களித்துவிட்டு வெளியேறிய டி.ராஜேந்தர்,”பையனூரில் பெப்சிக்கு (திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்) 10 ஏக்கர் நிலம் தரப்பட்டது, அதில் படப்பிடிப்பு தளம் கட்டியுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த நிலத்தை ஏன் பதவியிலிருந்தவர்கள் பயன்படுத்தவில்லை. இதுவே, நான் தலைமைக்கு வர வேண்டியது கட்டாயம். நான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் சங்கத்திற்காக பல கேள்விகளை கேட்டுள்ளேன். இறைவனை நம்பி செய்யும் எந்த செயலும் தோற்காது”என்றார்.
வாக்குப்பதிவு சென்று கொண்டிருக்கும்போது டி. ராஜேந்தரின் அணி தங்க நாணயம், பணம் பட்டுவாடா செய்கின்றனர் என நலம் காக்கும் அணியினர் தெரிவித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நலம் காக்கும் அணி தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி,"ஒன்றரை ஆண்டுகளாக நிர்வாகம் நடைபெறாமல் சங்கம் இருந்தது. இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்காக பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து தயாரிப்பாளர்கள் வந்துள்ளனர். இது மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
எங்கள் அணி வெற்றிபெற்றால் கரோனாவால் தேக்கமடைந்துள்ள படங்களை வெளியிட நடவடிக்கை எடுப்போம், உறுப்பினர்களுக்கு காப்பீடு கிடைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வோம். சங்கத்தின் நிதி நிலையை சீர்படுத்திவோம். வாக்குக்காக தங்க நாணயம் , பணம் பட்டுவாடா வழங்கப்பட்டது தொடர்பாக நீதிபதியிடம் புகாரளித்துள்ளோம். அதன் உண்மை தன்மையை நீதிபதி உறுதிப்படுத்துவார்" என தெரிவித்தார்.
இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிடவில்லை. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, ஆகியோர் போட்டியிடுகின்றனர். பி.எல்.தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கியுள்ளனர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதில் பதவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும்’: பாஜகவினருக்கு அமித் ஷா அறிவுரை