சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் இன்று (நவ. 23) நடைபெற்றது. இதன்பிறகு சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நாங்கள் நிர்வாகத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. தேர்தல் குறித்து அடுத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழ்த் திரைப்படங்களை பண்டிகை காலங்களில் வெளியிடக் கூடாது என்று தெலுங்கு சினிமாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் பேசியுள்ளோம். சினிமா, மொழி கடந்தது. இதனை மொழி பிரச்சனை ஆக்க வேண்டாம் என்று பேசியுள்ளோம். அவர்களும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த முடிவை தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாபஸ் பெற வேண்டும்.
எங்களையும் அந்த மாதிரி தீர்மானம் நிறைவேற்ற வைத்துவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளோம். எங்களை பொறுத்தவரை வாரிசு படத்திற்கு எந்தவித சிக்கலும் இல்லை. பொங்கலுக்கு தெலுங்கு மொழியில் நிச்சயம் வெளியாகும். விஜய் என்ற நடிகருக்காக இப்படி பிரச்சனை வரவில்லை. அங்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. விஜய் படம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
திரையரங்குகளில் வெளியான படங்களை 10 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்குகள் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் இதுவரை பொதுவெளியில்தான் கோரிக்கை வைத்துள்ளனர். எங்களிடம் கோரிக்கை வைத்தால், அவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
அட்லியின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசினர். ஜவான் படத்திற்கும் பேரரசு படத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொன்னார்கள். இது குறித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் கஸ்டடி!