சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தயார் செய்யப்பட்ட தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று (அக்.27) வெளியிட்டார். இந்த வாக்காளர்கள் வரைவு பட்டியல் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த விரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் https://www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
2024-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,11,31,197 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள்:3,00,68,610 பெண்கள்:3,10,54,571 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்:8,016 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிக அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாகச் செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு, 6,52,065 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள்:3,26,676 பெண்கள்:3,25,279 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்:110 பேர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி உள்ளது. இங்கு, 1,69,030 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள்:83,436 பெண்கள்:85,591 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்:3 பேர் உள்ளனர்.
உங்களது வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்: Voter List Check
மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நவம்பர் மாதம் 4 மற்றும் 5ஆம் தேதிகளிலும், அதே போல் நவம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த, சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தம் ஆகியவற்றை விண்ணப்பிக்கலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்க டிசம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டார். இந்த மாவட்ட அளவிலான பட்டியலை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் என்விஎஸ்பி (NVSP) இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம்; சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனுத் தாக்கல்!