சென்னை: நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இதுமட்டுமின்றி நடிகர் சூர்யா தனது குடும்பத்தின் உதவியுடன் 'அகரம் ஃபவுண்டேசன்' என்னும் பெயரில் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
இந்த அறக்கட்டளை மூலம் ஏழை, கிராமப்புற மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான கல்வி உதவிகளைச் செய்து வருகிறார். இந்த அகரம் தொடங்கி 18 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. கிட்டத்தட்ட 5000 மாணவர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
அண்ணனுக்கு அகரம்; தம்பிக்கு உழவன்
அண்ணனின் அகரம் ஃபவுண்டேஷனை தொடர்ந்து, தம்பி கார்த்தி உழவன் ஃபவுண்டேஷன் சார்பில், 'உழவர் விருதுகள்' என்கிற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மையில் தங்களது தனித்துவத்தைக் காட்டி வரும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கி கௌரவித்து வருகிறார். அதையொட்டி அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசுப் போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார்.
சிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன வேளாண் கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
சென்ற ஆண்டு உழவன் ஃபவுண்டேஷன் மூலம் நடிகர் கார்த்தி, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள்; சிறு,குறு விவசாயத்திற்கு உதவும் கருவிகளைக் கண்டறிந்த இளைஞர்கள், பார்வைத்திறன் குறைபாடுடைய விவசாயிகள், நலிவடைந்த விவசாயிகள் எனப் பலருக்கும் உதவித்தொகையை வழங்கி இருந்தார்.
விவசாயம் அடுத்த தலைமுறைக்கும் வேண்டும்
இந்நிலையில் நேற்று(மார்ச் 5) சென்னையில் நடைபெற்ற விழாவில் சூர்யா, கார்த்தி இருவரும் கலந்து கொண்டுள்ளனர். மேடையில் பேசிய சூர்யா, 'இன்னும் எனது உறவினர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும். எப்போதும் விவசாயிகளின் குரலாக இருப்பதில் தனக்கு விருப்பம்' எனத் தெரிவித்தார்.
மேலும் சூர்யா பேசுகையில், 'தங்கள் வீட்டிலிருந்த ஒரு காய்ந்த மரத்தைத் தானும் கார்த்தியும் பேசியே வளர வைத்ததாகக் கூறினார்.
இது குறித்து நடிகர் சூர்யா குறிப்பிடுகையில், 'எங்கள் வீட்டிலிருந்த ஒரு மரம் காய்ந்துவிட்டது. இது இனி வளரவே வளராது என்று தோட்டக்காரர் கூறிவிட்டார். நாம் பக்கத்தில் உட்கார்ந்து பேசினால் மரம் வளரும் என்று யூ-ட்யூபில் பார்த்தேன். அதைக் கார்த்தியிடம் சொன்னேன்.
பேசியே மரத்தை வளர்த்தோம்!
ஒருநாள் அந்த மரத்தின் பக்கத்தில் சென்று, ''உன் பக்கத்தில் உள்ள மரம் எப்படி வளருது. அதை மாதிரியே நீயும் வளர்ந்தால் என்ன'' என்று பேசினேன். அந்த ஒருநாள் மட்டும்தான் நான் பேசினேன். ஆனால், கார்த்தி தினமும் பக்கத்தில் அமர்ந்து மரத்துடன் பேசினார். தற்போது, காய்ந்த அந்த மரம் பக்கத்திலிருந்த மரத்தைவிட உயரமாக வளர்ந்துவிட்டது. பராமரித்துக் கொண்டிருக்கிற தோட்டக்காரரே வெட்டிப்போட்டுவிடலாம் என்று சொன்ன ஒரு மரம், மீண்டும் வளர்ந்ததைப் பார்த்து எங்கள் வீட்டில் அனைவருக்குமே ஆச்சரியம்" என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘என்னை வைத்து காதல் படம் எடுக்க தைரியம் வேண்டும்’ - நடிகர் பிரபாஸ்