சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்யும் பணிகளை அரசுத் தேர்வுத்துறை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடித்தத்தில், '2022-23ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
மாணவரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், வகைப்பாடு (சாதி அடிப்படையிலான வகைப்பாடு), மதம், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மாற்றுத்திறனாளி வகை மற்றும் சலுகைகள், கைபேசி எண், பாடத்தொகுப்பு, பயிற்று மாெழி, மாணவரின் வீட்டு முகவரி, பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆகியவற்றில் திருத்தங்கள் இருந்தால் உடனே திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
EMIS Portal-ல் உள்ள மாணவர் பெயர், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் UNICODE Font-ல் மட்டுமே இருக்க வேண்டும். வேறு ஏதேனும் இருந்தால் UNICODE Font –ல் மாற்றம் செய்ய வேண்டும். மாணவரின் பெயர் பிறப்புச்சான்றிதழில் உள்ளவாறே இருத்தல் வேண்டும். மாணவரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது தலைப்பெழுத்தும் தமிழில் இருத்தல் வேண்டும்.
மாணவரின் பிறந்த தேதியை பிறப்புச்சான்றிதழுடன் ஒப்பிட்டு பார்த்தப்பின்னரே பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரை பள்ளி ஆவணங்கள் அல்லது ஆதார் அட்டையில் உள்ளவாறு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தவறில்லாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்படும் செல்போன் எண்களில் தேர்வு முடிவு தெரிவிக்கப்படவுள்ளதால், சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையில் வகுப்பு ஒவ்வொன்றையும் எந்த பயிற்று மாெழியில் படித்தார் என்ற விவரத்தினை தனித்தனியே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் பகுதி 1-ல் தமிழ் மொழியை மட்டுமே மொழிப்பாடமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தமிழ்நாட்டிலேயே பிற பாடத்திட்டமான சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற பாடத்திட்டத்தில் படித்து தமிழ் மாநிலப் பாடத்திட்டத்திற்கு நேரடியாக 9,10ஆம் வகுப்பில் சேர்கின்ற மாணவர்களுக்கு மட்டும் பகுதி 1 தமிழ் மொழித்தாள் எழுதுவதில் இருந்து 2023-24ஆம் ஆண்டு வரையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், தலைமை ஆசிரியர் தனது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடன் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவரின் விவரங்களில் தவறுகள் ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மேம்பாட்டுக்கு செய்ய வேண்டியது என்ன? - தமிழக அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்!