சென்னை: மதுரையைச் சேர்ந்த ரெகுநாத பிச்சை - லட்சுமி தம்பதியரின் மகன் சுந்தர் பிச்சை. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO of Google) பணியாற்றி வருகிறார். சுந்தர் பிச்சையின் தந்தை மதுரையை சேர்ந்தவர் என்றாலும், குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறினார். அசோக் நகரில் தான் அவர் முதல் முதலாக வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் சுந்தர் பிச்சை பிறந்தார். சென்னையில் உள்ள பள்ளியில் படித்த அவர், 20 வயது வரை அசோக் நகர் வீட்டில் தான் வசித்துள்ளார்.
1989ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக காரக்பூர் ஐஐடியில் சேர்ந்தார். தற்போது உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள பூர்வீக வீட்டை விற்பனை செய்ய சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சை முடிவு செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த சென்னையை சேர்ந்த துணை நடிகர் மணிகண்டன், எப்படியாவது இந்த வீட்டை வாங்கி விட வேண்டும் என முடிவு செய்தார்.
அதன்படி சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை துணை நடிகர் மணிகண்டன் வாங்கியுள்ளார். எனினும், அவர் எவ்வளவு தொகைக்கு இந்த வீட்டை வாங்கினார் என்ற விவரம் தெரியவில்லை. துணை நடிகர் மணிகண்டன், ரியல் எஸ்டேட் பணியையும் செய்து வருகிறார். தனது ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம், 300 வீடுகளை அவர் கட்டிக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து துணை நடிகர் மணிகண்டன் கூறும்போது, "கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியாவுக்கே பெருமை அளிக்கக் கூடியவர். அவர் பிறந்த வீட்டை நான் வாங்கியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுந்தர் பிச்சையின் தந்தை சென்னை வந்தவுடன், அவரை நான் பார்த்தபோது உடனடியாக வீட்டு ஆவணங்களை என்னிடம் அவர் ஒப்படைத்தார். சுந்தரின் தாய் எனக்கு காபி போட்டுக் கொடுத்தார். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய வரிகளையும் செலுத்த சுந்தர் பிச்சையின் தந்தை நீண்ட நேரம் காத்திருந்தார். எல்லா பணிகளையும் சிறப்பாக செய்த முடித்த பிறகே ஆவணங்களை முறைப்படி என்னிடம் வழங்கினார். அப்போது அவர் கண் கலங்கினார். இந்த நடைமுறைக்காக அவர் எந்த விதத்திலும் சுந்தர் பிச்சையின் பெயரை பயன்படுத்தவில்லை" எனக் கூறினார். இந்நிலையில், தங்களது பூர்வீக வீட்டை தனது சொந்த செலவில் இடித்த ரெகுநாத பிச்சை, மணிகண்டனிடம் அந்த நிலத்தை ஒப்படைத்தார். அந்த இடத்தில் மணிகண்டன் புதிய வீட்டை கட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.