சென்னை: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வப்பெருந்தகை, திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பழனிசாமி ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல
"தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல. அவர் எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா தான் முதலமைச்சராக்கினார் என வடிகட்டிய பொய்யை அவர் கூறி வருகிறார். ஆனால் நான் 50 ஆண்டு காலமாக பொதுவாழ்க்கையில் இருந்து, படிப்படியாக முன்னேறியுள்ளேன். தமிழ்நாடு அமைச்சரவையில் வேலுமணி, தங்கமணி முதல் கடைக்கோடி அமைச்சர்கள் வரை ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது அனைவருக்கும் தெரியும்.
ஊழல் அமைச்சர்கள்மீது நடவடிக்கை
உள்ளாட்சித் துறையில் பல்பு வாங்கியது முதல் அனைத்திலும் ஊழல். அதேபோல அமைச்சர் தங்கமணி நிலக்கரி ஊழல் என பல்வேறு ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ளார். திமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெட்ரோல், கேஸ் விலையைக் குறைக்க நடவடிக்கை
இந்தத் தேர்தலில் கதாநாயகன்-கதாநாயகி எல்லாமே திமுக தேர்தல் அறிக்கைதான். அதிமுக தேர்தல் அறிக்கை காமெடி வில்லனாக இருக்கிறது. நாம் என்னென்ன திட்டங்கள் அறிவிப்போம் என அறிவாலயம் வாசலில் காத்துக்கிடக்கிறார்கள். அதை காப்பி அடித்துதான் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவும், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்படும்
தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வண்டலூர், ஊரப்பாக்கம் பகுதிகளை இணைத்து புதிய நகராட்சி உருவாக்கப்படும். சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி, நகராட்சியாக மாற்றப்படும். செங்கல்பட்டில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை வண்டலூர் வரை நீட்டிக்கப்படும். இன்னும் எண்ணற்ற பணிகள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்து முடிக்கப்படும்" என அவர் பேசினார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு ஓர் ஊழல் காடு' - பழ கருப்பையா