சென்னை: மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், சேலையூர், அஸ்தினாபுரம், ஜமீன் ராயப்பேட்டை, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையின் போது சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியது. இதனால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் என பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும், சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதியில் தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குடியிருப்பு பகுதியில் தேங்கி இருக்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் தேங்கி பாதிப்படைந்த பகுதிகளை மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, ஜமீன் ராயப்பேட்டை, நடேசன் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பெய்த கனமழை காரணமாக மழை நீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் அழகு மீனா உத்தரவிட்டு இருந்தார்.
அதேபோல் செம்பாக்கம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட தெருக்களில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திருமலை நகர் பகுதியில் மழை நீர் கால்வாய் கட்டப்பட்டு வருகின்றது. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் கூறியதாவது, "இன்று காலை முதல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருவதாகவும், மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு தாழ்வான சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும், வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” என்றார்.
அதேபோல நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்வான சாலைகள் உயர்த்தப்படும் என்றும் வழக்கு நிலுவையில் இருந்ததால் சாலை போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். தற்போது வழக்குகள் முடிந்து விட்டதால் சாலைகள் போடுவதற்கு உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாகவும், வரும் வடகிழக்கு பருமழைக்கு முன்னரே தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் புது கட்டுபாடு - வாகன ஓட்டிகளே உஷார்!