சென்னை: தமிழ்நாட்டில் உள்ள காவல் ஆணையரகங்களில் மிகப்பெரிய ஆணையரகமாக பெருநகர சென்னை காவல் ஆணையரகம் உள்ளது. சென்னை காவல் ஆணையரான (ஏடிஜிபி அந்தஸ்து அலுவலர்) சங்கர் ஜிவாலுக்கு கீழ் ஐந்து கூடுதல் ஆணையர்கள் (ஐஜி) உள்ளனர்.
அவர்களுக்குக் கீழ் ஆறு இணை ஆணையர்கள் (டிஐஜி), துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் என சென்னை காவல் துறையின் நிர்வாகக் கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் செயல்பட்டுவருகின்றது. அதுமட்டுமின்றி சென்னை காவல் துறை மட்டுமே திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வரை விரிவடைந்துள்ளன.
அதிகரிக்கும் மக்கள் தொகை, காவல் எல்லை விரிவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சென்னை காவல் துறையை நிர்வகிப்பதில் சிக்கல் நிலவிவந்தது. சமீபத்தில் தாம்பரம், ஆவடியை மாநகராட்சிகளாக உயர்த்தி அரசு அறிவித்தது.
இதனையடுத்து கடந்த 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே 2008ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டுவந்தது. பின்னர் மீண்டும் சென்னை காவல் ஆணையரகம் ஒன்றாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏடிஜிபி ரவி, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறப்பு அலுவலர்களான இவர்கள் காவல் நிலையங்களைப் பிரிப்பது பற்றி டிஜிபி, சென்னை காவல் ஆணையர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் புதிதாக இரு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!