சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் சஞ்சீவராயன்பேட்டையில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2014ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், ஆட்டோ மூலமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து விட்டது.
மனித உரிமை ஆணையத்தில் புகார்
இதனால், மருத்துவர் தனலட்சுமிக்கு எதிராக மணிமேகலை, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதையடுத்து, மருத்துவரின் அலட்சியத்தால் தனது குழந்தை இறந்துவிட்டதாக கூறி, மருத்துவருக்கு எதிராகவும், புகார் மீது வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர் பாபு ராஜேந்திரபோஸுக்கு எதிராகவும் மணிமேகலை, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை வழங்க பரிந்துரை
இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், குழந்தையை பறி கொடுத்த பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் தனலட்சுமி மனித உரிமையை மீறியுள்ளதாகவும் கூறி, பாதிக்கப்பட்ட மணிமேகலைக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், சிசுக்கள் மரணத்தை தடுக்க, சென்னை மாநகராட்சியில் சிசுக்களுக்காக கூடுதல் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
இதையும் படிங்க: தாய்மார்கள் தாங்கள் விரும்புகிற நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தவிருங்கள் - மா.சுப்பிரமணியன்