சென்னை: டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் நடக்கும், குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தில், அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அலங்கார ஊர்திகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாளை (ஜன.26) குடியரசு தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி, அலங்கார ஊர்திகள் தயாரிக்கும் பணியை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் இன்று (ஜன.25) பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், "சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு என்ற அடிப்படையில் முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க சுதந்திர போராட்ட வீரர்கள் உருவப் படங்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள் நாளை குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்பெறும்.
அலங்கரா ஊர்தி அணிவகுப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கூட்டங்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அலங்கார ஊர்தியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின் நடைபெற்ற கூட்டங்களில் தமிழ்நாடு அரசின் ஊர்திக்கு முறையான அனுமதி கிடைக்கப்பெறவில்லை.நாளை சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” - ஸ்டாலின் கடிதம்