சென்னை: நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தரின் குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்னை தேனாம்பேட்டை இளங்கோ தெருவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையில் அமர்ந்தபடி முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயற்சித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டி.ராஜேந்தரின் குடும்பத்தினர் சென்ற கார், அந்த முதியவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.
முதியவர் உயிரிழப்பு: இதில் படுகாயமடைந்த முதியவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து காவல்துறை விசாரணையில் டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் செல்வம் இந்த விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த முனுசாமி (50) இன்று (மார்ச் 23) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
மருத்துவமனைக்குச் சென்று திரும்பியபோது விபத்து: இதுதொடர்பாக டி.ராஜேந்தரின் கார் ஓட்டுநர் செல்வம் என்பவரை, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் டி.ராஜேந்தரின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் காரில் நடிகர் சிம்பு தவிர, அனைவரையும் அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
முதியவருக்கு காலில் அடிப்பட்டு இருந்ததாகத் தகவல்: முனுசாமி போதையில் சாலையில் அமர்ந்து இருந்தாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரின் குடும்பத்தினர் முதியவரின் காலில் அடிபட்டு இருந்ததால் சாலையை அமர்ந்தபடி கடந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி நிர்பயா வழக்கை மிஞ்சும் கொடூரம்: வேலூரில் மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு - 5 பேர் கைது