கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறையினரின் தாகம் தணிக்கும் திட்டமான, தமிழ்நாடு அரசின் மோர் வழங்கும் திட்டத்தை எட்டாம் ஆண்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடக்கி வைத்தார்.
அதன்படி, சுமார் 4 மாதங்களுக்கு 5000 மோர் பாக்கெட்டுகள் (122 நாள்கள்) வழங்கப்படவுள்ள இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் சுசுக்கி மோட்டார் சைக்கிள் நிறுவனம் சார்பில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஐந்து நவீன சுற்றுக்காவல் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சுற்றுக்காவல் இருசக்கர மோட்டார் வாகனத்தில் காவல்துறையின் வசதிக்கேற்ப ஒலிப்பெருக்கி, சைரன், சமிக்ஞைகளை கட்டுப்படுத்தும் அதிநவீன வசதிகள் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், தமிழ்நாடு அரசின் இந்த மோர் வழங்கும் திட்டம் காவல்துறையினருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், போக்குவரத்து காவல்துறை மிகவும் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், பொதுமக்கள் அனைத்து சாலை விதிகளையும் மதிக்கும் அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு அதை கடைபிடிக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து காவல்துறையின் நலன் கருதி 5 அதிநவீன இருசக்கர வாகனங்களை வழங்கியுள்ள சுசுக்கி நிறுவனத்திற்கு நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் !