மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா சில கருத்துகளை முன்வைத்தார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து விவாதங்கள் நடைபெற காரணமாகவும் அமைந்தது.
இந்நிலையில், ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி அவரது கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அகரம் ஃபவுண்டேசன் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
நமது நாட்டில் கல்வி சூதாட்டமாக மாறிவிடக்கூடாது என்பதே எனது ஆதங்கமாக உள்ளது. அகரம் ஃபவுண்டேசன் சார்பில் பல ஏழை மாணவர்களின் வாழ்க்கை சூழலையும், கல்வி கற்கும் ஆற்றலையும் காண நேர்ந்ததால் 'ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே தேசிய கல்விக் கொள்கை குறித்த என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்'.
அனைவருக்கும் சமமான தேர்வு என்பதைவிட, ஏழை, பணக்கார பாகுபாடின்றி அனைத்து குழந்தைகளும் தரமான, சமமான கல்வி பெறுவதே அரசின் இலட்சியமாக இருக்கவேண்டுமெனவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாவிதமான பட்டப்படிப்புகளுக்கும் நுழைவத்தேர்வு என்பது ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் ஆசையை துடைத்தெறிந்துவிடும். எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் கிராமப்புற மாணவர்களின் பங்கும் இருக்கவேண்மென்பதே எனது ஆசை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது, ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய கல்வி வரைவு அறிக்கை மீதான கருத்துகளை கல்வியாளர்கள், மாணவ அமைப்புகள், பெற்றோர்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.