சென்னை: தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கேற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதனையொட்டி ஆயிரம் விளக்கு தொகுதி இராயப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்; "பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் நாய்கள் குறித்துக் கணக்கெடுப்பு பணி எடுக்கப்பட உள்ளது. இதில் அனுமதிக்கப்பட்ட நாய்கள், அனுமதி பெறாத நாய்கள், கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் கொண்டு வந்து விடப்பட்ட நாய்கள் எத்தனை என்கின்ற விவரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வெறி நாய்கள் கடித்ததால் 27 பேர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அவர்கள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். வெறி நாய்கள் கடித்தால் அக்கம்பக்கத்தினர் மாநகராட்சி பிரதிநிதிகளின் தொடர்பு எண்கள் மூலம் உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கோ தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்ட கால்நடைத்துறையினர் வெறிநாய்களைப் பிடிப்பர். மேலும், அது சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், டெங்கு காய்ச்சல்களை பொறுத்தவரை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 7,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு கடந்த ஆண்டுகளை விட மிகவும் குறைவு. அரசு மற்றும் தனியார் பரிசோதனையின் படி நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 பேர் வரை பாதிப்பு உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம் குறித்து அவர் பேசுகையில்; வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று (நவம்பர் 25) 5-ஆவது வார மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் 1,000 முகாம்கள் என்று தொடங்கி 2000-த்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 8,380 மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118, கௌடியா மடம் சாலை, அம்மையப்பன் சந்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இதில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தார்கள்.
இதையும் படிங்க: பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!