சென்னை: கடந்தாண்டு வெளியான 'ஜெய்பீம்' திரைப்படத்தில் வன்னியர்களை அவதூறாக சித்தரித்து இருப்பதாக எழுந்த சர்ச்சையில் பாமகவினர் பலர் நடிகர் சூர்யாவிற்கு கொலைமிரட்டல்கள் வெளியாகின.
இதனால் சென்னை - தியாகராய நகர், ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு சுழற்சி முறையில் 5 காவலர்கள் துப்பாக்கியோடு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படமானது நாளை (மார்ச் 10) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
''ஜெய்பீம்' படத்தில் வன்னியர்களை கொச்சைப்படுத்திய நடிகர் சூர்யா மன்னிப்பு கோராத வரை கடலூர் மாவட்டத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது' என கடலூர் மாவட்ட பாமக மாணவர் சங்க மாநிலச் செயலாளர் விஜயவர்மன் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதனையடுத்து தியாகராய நகர், ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாகப் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கு : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 1 லட்சம் அபராதம்