டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (ஜூன் 21) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு விசாரித்தது.
அப்போது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகலாம். உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் இடைக்கால உத்தரவில் இருந்தன. மேலும், உச்ச நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கருத்துகளும் வழக்கில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
செந்தில் பாலாஜி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது அதிருப்தி அளிக்கிறது. ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோது அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா? செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும்போது, மருத்துவர்களின் கருத்தைக் கொண்டுதான் விசாரணை நடத்த முடியும். தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றத்தை சந்தேகப்பட முடியாது.
உயர் நீதிமன்றம் முன்பு அமலாக்கத்துறை மீண்டும் முறையிடலாம்” எனக் கூறி வழக்கின் விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும், இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சோசிலிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, உயர் நீதிமன்ற உத்தரவு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது என வாதிட்டார்.
அது மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சையே சந்தேகப்படும்படி உள்ளதாகவும், விசாரணையை தாமதப்படுத்தவே இது போன்ற செயல்களை செய்வதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜியின் இதயத்தில் உள்ள அடைப்புகளை போலியாக காண்பிக்க முடியுமா என செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.
முன்னதாக, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் செந்தில் பாலாஜியை கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி முதலில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில், செந்தில் பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனிடையே, 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரிய நிலையில், 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க: "செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியவில்லை" - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புலம்பல்!