சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை (ஆக.28), ஒன்றிய அரசு ஏற்கனவே நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானாத்திற்கு பேரவையில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலவியது.
பாமக சட்டப்பேரவை குழுத் தலைவர் ஜி.கே.மணி : “வேளாண் திருத்தச் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் உற்பத்தி வேறு மற்ற மாநிலங்களின் உற்பத்தி வேறு. அந்த அடிப்படையில், ஒன்றிய அரசின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்றார்
தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த வேல்முருகன்: "மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும். விவசாயிகளின் வேதனையை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக இந்த தீர்மானம் உள்ளது. முதலமைச்சர் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை வரவேற்கிறேன்" எனத் தெரிவித்தார்.
ஈஸ்வரன், கொங்கநாடு மக்கள் தேசிய கட்சி: “டெல்லியில் போராடும் விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்துள்ள தீர்மானம் வரவேற்கத் தக்கது” என்றார்.
பேரா. ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி: “மாநில அரசுகளைக் கேட்காமல் சட்டங்களைக் கொண்டு வரும் போக்கில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. இதனைத் தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது. இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
தளி ராமசந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: "வேளாண்மை திருத்தச் சட்டங்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேரவையில் கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்" என்றார்.
நாகை மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: "முதலமைச்சரை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன். மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் கொண்டுவந்துள்ள தீர்மானம் டெல்லி வீதிகளில் போராடும் விவசாயிகளுக்கு உத்வேகத்தையும், போராட்ட உறுதியையும் அதிகரிக்கும்" என்றார்.
செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி: “மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் எனத் தெரிவித்தார்கள். ஆனால் தற்கொலைகள் தான் இரட்டிப்பாகியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன்” என்றார்.
சிந்தனை செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி: “தமிழ்நாடு அரசு வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருப்பதால், ஒன்றிய அரசு வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
தீர்மானம் குறித்து அதிமுக சார்பில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் கே.சி. அன்பழகன், “முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர், விவசாய சங்கத்தினரை அழைத்துப் பேசி வேளாண் திருத்தச் சட்டங்களில் இருக்கக் கூடிய லாப நஷ்டங்களை கலந்தாலோசித்து, அதில் வேண்டியத் திருத்தங்களை கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பாஜக சட்டப்பேரைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம்” தெரிவித்தார்.
வழக்குகள் ரத்து - முதலமைச்சர் அறிவிப்பு:
வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்களைத் திரும்ப பெற வேண்டும் என, தீர்மானத்தின் போது பேசிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேல்முருகன், பேரா. ஜவாஹிருல்லா ஆகியோர் கோரிக்கை வைத்தனர்
அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், “ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தங்களைக் கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகிறது” என அறிவித்தார்
இதையும் படிங்க:'சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு எழுச்சிமிகுப் போராட்டம் நடந்தது இல்லை'