மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன், தற்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை சட்டத்துக்கு உட்பட்டு முறையாக வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனம் தனக்குத் தான் உரிமை உள்ளது என்று தாஸ் என்பவர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு டிஜிபி அந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும், அந்த மனுவில் தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது, சட்டவிரோதம் என்றும் விதிகளுக்கு முரணானது என்றும் எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, நிறுவனம் முறைப்படி வாங்கியதாகவும், இதுதொடர்பான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமலாக்கத்துறை இந்த சம்மன் அனுப்பி உள்ளது சட்டவிரோதம், அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை பிறப்பித்த சம்மனுக்கு நான்கு வாரம் இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.