தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு மாதங்களைக் கடந்தும் உள்கட்சி பூசலால் தற்போதுவரை தமிழ்நாடு பாஜகவிற்கு மாநிலத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை.
தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சில இடங்களில் வெற்றிபெற்றுள்ளதைக் கருத்தில்கொண்டும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவதற்கும் மாநிலத் தலைவரை நியமிக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் சிவபிரகாஷ், மாநிலங்களவை உறுப்பினர், தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் தலைமையில் மாநில நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், நயினார் நாகேந்திரன், மோகன் ராஜுலு, வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், தேசிய இளைஞர் அணி செயலாளர் ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் புதிய மாநிலத் தலைவரை பாஜகவின் தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க:இந்திய மக்கள் 130 கோடி பேரும் இந்துக்கள் - மோகன் பகவத்