சென்னை: மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு 105 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம் வானில் பறக்கத் தொடங்கியது. இதனையடுத்து விமானம் நடுவானில் பறந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். எனவே, விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் மீண்டும் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது. இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் விமான பொறியாளர் வல்லுநர்கள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதனையடுத்து விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக மீண்டும் துபாய்க்கு புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து துரிதமாக செயல்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 112 பேர் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், துபாய் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் தரையிறங்கிய சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக நேற்று (ஜூன் 26) காலை சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக பயணிகள் 8.30 மணி முதல் காத்திருந்தனர். ஆனால், சிங்கப்பூரில் இருந்து சென்னை வர வேண்டிய விமானம் தாமதமாகி இருந்தது. இதனால் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானமும் தாமதமாகி இருந்தது. இதன் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய பயணிகள், விமான நிலையத்தில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படத் தொடங்கியது. பின்னர் விமான நிறுவன ஊழியர்கள், பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு பயணிகளை டெல்லி செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கிறோம் என்று நிறுவன ஊழியர்கள் கூறியதை அடுத்து பயணிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
மேலும், அவசரமாக டெல்லி செல்ல வேண்டிய பயணிகளை விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக புறப்பட இருந்து வேறு நிறுவன விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். விமானம் தாமதமானதால் பயணிகள் விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.