சென்னை: சென்னை அடுத்த பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வரை, மின்சார ரயில் வழித் தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை (அக்.1) 10:30 மணி முதல் மதியம் 2:50 மணி வரை தாம்பரம் நோக்கிச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 3 மணிக்கு மேல் ரயில்கள் வழக்கமாக இயக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பகல் 3:30 மணி அளவில் தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற ரயில் ஒன்று கிண்டி ரயில் நிலையத்திற்கு வந்தபோது, பிரேக் பிடிக்கையில் திடீரென பெட்டிக்குள் கரும்புகை ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் நிற்பதற்கு உள்ளாகவே பயணிகள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினர். இதனையடுத்து ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்ததில், மின்சார ரயிலின் பிரேக் பாயிண்டில் ஏற்பட்ட பழுது காரணமாக இவ்வாறு கரும்புகை வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அவை சரி செய்யப்பட்ட பின் 15 நிமிடங்களுக்குப் பிறகு ரயில் கடற்கரை நோக்கிச் சென்றது.
மேலும், ஓடும் ரயிலில் திடீரென கரும் புகை ஏற்பட்டதால், பயத்தில் பயணிகள் அங்கும், இங்குமாக கூச்சலிட்டபடி ஓடவே கிண்டி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பராமரிப்பு காரணமாகத் தாம்பரம் சென்னை கடற்கரை ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பேருந்துகளின் அதிகப்படியான மக்கள் பயணித்து வருகின்றனர்.
இதனால் தாம்பரம், குரோம்பேட்டை பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், தாம்பரம் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய விற்பனைக்கு கூட வங்கிக் கடனா? - தனியார் நிதி நிறுவனம் பெயரில் பெண் பேசிய ஆடியோ!