சென்னை : கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ”நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு காலத்திலும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. அதிமுக கூட்டணியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் எந்த ஒரு நலத் திட்டத்தையும் மம்தா பானர்ஜி செயல்படுத்தவில்லை. மேற்கு வங்கத்தின் நிலை தமிழ்நாட்டிற்கும் வரக்கூடாதெனில் அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியில் ஆறு முதல் பதினெட்டு மணி நேரம் மின்வெட்டு இருந்தது.
கட்டப்பஞ்சாயத்து நடத்தும் திமுக ஆட்சிக்கு வர வேண்டுமா..? எதற்காக திமுக ஆட்சிக்கு வர வேண்டும்? திமுகவில் வாரிசு அரசியல் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்கள், புதியவர்களுக்கு திமுகவில் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த கட்சி காங்கிரஸ்.
மிசா சட்டத்தின்கீழ் திமுக தலைவர் ஸ்டாலினை கைது செய்த கட்சி காங்கிரஸ். தற்போது, அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கிறது திமுக. தமிழின துரோகி திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. ஒரு நியாயவிலைக் கடை அட்டைக்கு 2 ஆயிரத்து 500 கொடுத்த அதிமுகவால் மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் தர முடியாதா என்ன..? சொன்னதைச் செய்பவர்கள் அதிமுக. இலவச நிலம் தரப்படும் என திமுகவினர் சொன்னார்களே தந்தார்களா..? சொல்லியதை எல்லாம் திமுக செயல்படுத்தவில்லை. இன்று (மார்ச் 12) அல்லது நாளை (மார்ச் 13) பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க : அயராது உழைத்து வெற்றியை ஈட்டி தருவோம் - மநீம தொண்டர்கள்