சித்தூரைச் சேர்ந்த பெண் குழந்தை ஒன்று பிறக்கும்போதே தலசீமியா நோயுடன் பிறந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக குழந்தையின் மேல் உதடு மற்றும் அண்ணத்தில் குறைபாடு இருந்தது. அந்த குழந்தைக்கு ஒரு வயதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை உயிர் வாழ மூன்று வாரங்களுக்கு ஒரு முறை ரத்த மாற்று சிகிச்சை செய்வது கட்டாயமாக இருந்தது.
இந்த நோய் காரணமாக உடலில் சேரும் அதிக அளவிலான இரும்பு சத்தை அகற்ற மருந்துகளும் தேவைப்பட்டன. ஆனால், போதிய பணம் இல்லாததால் அவரது குடும்பத்தால் மருத்துவ சிகிச்சையை கவனிக்க முடியவில்லை. இந்நிலையில், அந்தக் குழந்தைக்கு இலவச எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக் மேற்கொள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு குழந்தைக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்டெம் செல் சேகரிப்பு மற்றும் அதற்கான செயலாக்கத்தை ரெலா மருத்துவமனை மேற்கொண்டது. பேராசிரியர் முகமது ரெலாவின் முழு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலால் இந்த அறுவை சிகிச்சை தற்போது வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, "குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு எங்களுக்கு உதவிடும் வகையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் ரெலா மருத்துவமனையுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்" என்றார்.
இது குறித்து ரெலா மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் முகமது ரெலா கூறுகையில், "குழந்தைகளுக்கான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்லது அரசு அமைப்புகளுக்கும் இதே ஆதரவை நாங்கள் வழங்குவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூளையில் அறுவை சிகிச்சை செய்தபோது பியானோ வாசித்த சிறுமி!