தமிழ்நாடு முழுவதும் உரிய அனுமதி இல்லாமல் பேனர் வைக்க கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை அமல்படுத்தாத தலைமை செயலாளர் மீது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொடர்பில்லாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வழக்குகள் திசை திருப்பப்படுகிறது என வேதனை தெரிவித்தது. மேலும் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாயை சம்பவத்திற்கு காரணமானவர்களிடம் இருந்து வசூலித்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், சென்னை காவல் துறை ஆணையர் கண்காணிப்பில் பள்ளிக்கரணை மற்றும் சென்ட் தாமஸ் மவுண்ட் காவல் ஆய்வாளர்கள் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ’சுபஸ்ரீ உயரிழப்புக்கு பிறகு கட்சியினர் பேனர்களை வைக்கக்கூடாது என மீண்டும் திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீதிமன்றம் தெரிவித்த உத்தரவுகளை திமுக தீவிரமாக கடைபிடித்துவருகிறது. மாநகராட்சி, காவல் துறை அதிகாரிகள் சட்டவிரோதமான பேனர்களை அகற்றாததே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணம். குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லாததால் ஓட்டுநரை கைது செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். பேனர் வைத்த குற்றவாளிகள் 2 வாரத்திற்குப் பிறகும் கைது செய்யப்படாததால், பேனர் விழுந்து உயரிழந்த சுபஸ்ரீ வழக்கை டிஜிபியின் நேரடி கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, பேனர் வைத்து சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, முக்கிய குற்றவாளியை பாதுகாக்கும் வகையில் குறைந்த தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யதுள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், திருமண நிகழ்ச்சிகளின்போது பேனர்களை மண்டபத்தின் முகப்பில் வைப்பதற்கு மாறாக பேருந்து நிலையம் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்தே பெரும்பாலும் வைக்கப்படுகிறது. பேனர்களால் நமது கலாசாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும், டிஜிட்டல் பேனர்களை 150 அடி வரை அச்சடித்துவிட்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டும் நிறுவனங்கள் பொறுப்பேற்க முடியாது என்றால் அதை நீதிமன்றம் ஏற்க முடியாது? மாநகராட்சி ஆணையரின் உத்தரவு நிறுவனங்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக உள்ளது என்றனர். எத்தனை டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன? உரிமம் இல்லாமல் எத்தனை நிறுவனங்கள் செயல்படுகின்றன? என விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதுமட்டுமின்றி, சுபஸ்ரீ வழக்கில் உதவி ஆணையர்கள் நடத்திவரும் விசாரணையை கூடுதல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்த விசாரணையை ஆணையர் கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், காவல் துறை விசாரணை தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர்கள் விசாரணை அறிக்கை தனியாகவும், சென்னை மாநகர காவல் துறை ஆணையரும் தனியாக அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சுபஸ்ரீ விவகாரம்; பேனர் வைத்த ஜெயகோபால் எங்கே? - திமுக தொடுத்த வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி