சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம், பசும்பொன் நகரை சேர்ந்தவர் ராம்சிங் (57). இவர், அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரிவு துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே, டிசம்பர் 8ஆம் தேதி ராம்சிங்குக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மீண்டும் டிசம்பர் 22ஆம் தேதி பரிசோதனை செய்த போது, தொற்று நோய் குணமானது தெரியவந்தது.
ஆனால், அவருக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராம்சிங் நேற்று (டிசம்பர் 28) உயிரிழந்தார். அதன் பிறகு, அவரது உடல் அம்பத்தூரில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், அவரது உடலுக்கு காவல்துறை அலுவலர்கள், காவலர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ராம்சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் அம்பத்தூர்- அயப்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள எரிவாயு தகன மேடையில் இன்று (டிசம்பர் 29) தகனம் செய்யப்பட்டது.