சென்னை: கரோனா வைரஸின் இரண்டாம் அலை தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் தீனதயாளன் என்பவருக்கு சில நாட்களாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக ஊழியர்களிடையே அச்சம் நிலவிவருகிறது. இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் பல்லாவரம் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
பின்னர், கரோனா தொற்று ஏற்பட்ட உதவி ஆய்வாளர் தீனதயாளன் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் பணிபுரிந்த காவலர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.