தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் வயதான தம்பதிகளான நூரில் ஹக், ஆயிஷா ஆகியோரை கட்டிப்போட்டு 250 சவரன் தங்க நகைகள், பணம், கார், விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஆகியற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் குற்றவாளியான மொய்தீனை தனிப்படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் உருக்கிய கட்டிகளாக மும்பையில் தனிப்படையினரால் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட துணை ஆணையர் ஹரி கிரண், காவல் அலுவலர்களை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய துணை ஆணையர் ஹரி கிரண், "இது முன்கோட்டியே நன்கு திட்டமிடப்பட்ட கொள்ளை. கைது செய்யப்பட்ட 9 பேருடன் மொய்தீன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட கூலிப்படையினரிடம், தனக்கும் நூரூல் உறவினருக்கும் கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துவருகிறது. கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் தனக்கு வர வேண்டிய கடனை தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி கூலிப்படையினரை அமர்த்தி உள்ளார்.
மொய்தீன் கூறியதை நம்பிய கூலிப்படையினர் 40 லட்சத்தில் தங்களுக்கு 10 லட்சம் வேண்டும் எனக் கேட்டு உள்ளனர். ஆனால் மொய்தீன் 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவர்களுக்கு கொடுத்துள்ளார் என்பது தெரியவருகிறது. தொலைபேசி உரையாடலை வைத்துதான் மொய்தீன் மும்பை சென்று இருப்பதைக் கண்டுபிடித்த காவல் துறையினர், அங்கு நடத்திய தொடர் விசாரணையில் தனியார் நகை கடையில் நகைகள் விற்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல்செய்தனர்.
மொய்தீனிடம் இலங்கை பாஸ்போர்ட் உள்ளது. எனவே, அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஏற்கனவே, நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்த மொய்தீன் அதன் அடிப்படையில் நகைகளை கொள்ளையடித்து விற்று விடலாம் என்கிற திட்டத்துடன் நூரில் வீட்டில் தங்கியிருந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். திருடிச் செல்லப்பட்ட கார் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அது மீட்கப்படும். கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: தொழிலதிபர் மனைவியை கட்டிப்போட்டு நகை திருட்டு, மூவர் கைது