சென்னை: சென்னையில் தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து, உத்தரப் பிரதேசத்தில் தேர்வானோரை தெற்கு ரயில்வேயில் பணி நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மக்களவை உறுப்பினர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் , ”2018 ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள உதவி ரயில் ஓட்டுநர், டெக்னீசியன் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தது. இதில் தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்கள் இருந்தன.
கோரக்பூர் விண்ணப்பதாரர்கள் சென்னையில் நியமனம்
விண்ணப்பதாரர்கள் இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் 17 ரயில்வே வாரியங்களில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.
இருப்பினும் எந்த வாரியத்துக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுகிறார்களோ, அங்குதான் அவர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். வேறு ரயில்வே வாரியத்தில் பணி நியமனம் செய்யக் கூடாது.
இருப்பினும் இதற்கு நேர்மாறாக உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை, தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணி நியமனம் சட்ட விரோதம்
அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை விட குறைவானதாகும். அதுமட்டுமல்ல இதர வாரியத்தில் தேர்வு செய்தவர்களை, தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதமாகும்.
ஏற்கனவே டெக்னீசியன் பிரிவில் தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில் 60 விழுக்காடு பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்களே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே தற்போது உதவி ஓட்டுநர் பதவிக்கு 13 விழுக்காடு பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோரக்பூர் விண்ணப்பதாரர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை
கோரக்பூர் ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமனம் செய்வது, தெற்கு ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் உடனடியாக ரயில்வே அமைச்சர் தலையிட்டு, கோரக்பூர் விண்ணப்பதாரர்களை திருப்பி அனுப்பி தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை காலியிடங்களில் நியமிக்க கோருகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'திமுக மக்களை ஏமாற்றுகிறது' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு