சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3 ஆம் தேதி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார். அதில் மதுரவாயலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கலந்து கொண்டு ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என அவதூறாக பேசியதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் உடனடியாக கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான கனல் கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கி இருந்த கனல் கண்ணனை சென்னை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். குறிப்பாக வழக்கறிஞர் ஒருவரின் பெயரில் புக் செய்து கடந்த 3 நாட்களாக கனல் கண்ணன் நட்சத்திர விடுதியில் பதுங்கி இருந்ததும், தகவல் அறிந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்ட போலீசார் உதவியுடன் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
இதனை அடுத்து எழும்பூர் 12வது நீதிமன்ற நீதிபதி லட்சுமி முன்பு கனல் கண்ணனை போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கும் வகையில் பெரியார் சிலையை அகற்றுமாறும்,மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருமாறு மட்டுமே கனல் கண்ணன் பேசியதாகவும், வாதிட்டனர்.
காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வழக்கின் தீவிரம் குறித்து வாதங்களை முன் வைத்தனர். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லட்சுமி வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறையில் முதல் வகுப்பு வேண்டும் என கனல் கண்ணன் தரப்பில் கேட்டதன் அடிப்படையில் நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் கனல் கண்ணன் ஜாமினில் எடுக்கவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறையில் அடைப்பதற்காக கனல் கண்ணனை போலீசார் காவல் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் எழும்பூர் நீதிமன்ற வாயிலில் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். காவல்துறை வாகனத்தை மறித்து படுத்துக்கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை வாகனம் முன்பு முற்றுகையிட்ட நபர்களை போலீசார் விலக்கிய போது, இந்து முன்னணியினர் மிரட்டும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவலர்கள் எச்சரித்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: வாரிசு திரைப்பட காட்சி இணையத்தில் கசிந்தது