சென்னை: உக்ரைனில் மேற்கு பகுதியில் புக்கோ வினியன் - ஸ்டேட் மெடிக்கல் யூனிவேர்சிட்டி - செர்வின்ட்சி மாநிலத்தில், அமைந்துள்ளது. புக்கோ வினியன் மருத்துவ கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். தற்போது, ரஷ்யா - உக்ரைன் போரின் காரணமாக அங்கிருந்து பேருந்தில் சென்றும், 8 கிலோ மீட்டர் நடந்தும், ருமேனியா எல்லைக்குள் வந்துள்ளனர்.
அங்கிருந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் டெல்லிக்கு நேற்று (பிப். 26) வருகை தந்தனர். அதில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஷகீா் அபுபக்கா், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஹரிஹர சுதன், அறந்தாங்கியைச் சேர்ந்த செல்வ பிரியா, தேனியைச் சேர்ந்த வைஸ்ணவ் ஆகிய ஐந்து தமிழ்நாட்டு மாணவர்கள் இன்று சென்னை வந்தனர்.
அரசு சார்பில் வரவேற்பு
அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரடியாக வந்து ஐந்து மாணவர்களையும் வரவேற்றார். முன்னதாக டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த கேரளாவைச் சேர்ந்த 11 மாணவ, மாணவிகளைத் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் வரவேற்றனர். இன்று(பிப்.27) மாலை அவர்கள் கேரளா செல்கின்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், "உக்ரைனில் சிக்கித்தவித்த மாணவர்களை மிக பாதுகாப்போடு முதலமைச்சரின் முயற்சியில், ஒன்றிய அரசின் ஒத்துழைப்பில் முதற்கட்டமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாணவர்களை மீட்டு வந்துள்ளோம். மீட்கப்பட்ட 5 மாணவ, மாணவிகளை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள், இன்று (பிப்.27) மாலை 12 மாணவர்கள் வர இருக்கின்றனர்.
1800 மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் பதிவு
மும்பைக்கு வந்து அங்கிருந்து சென்னைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளோம். மாணவர்கள் அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர். 1800 மாணவர்கள் ஈமெயில் மூலம் பதிவு செய்துள்ளனர். அதேபோல் பதிவு செய்த மாணவர்களை ஒவ்வொரு பல்கலைக்கழகம் மூலமாக மீட்க வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
நாடு திரும்பிய மாணவர், ஹரிஹரசுதன் கூறியதாவது, "உணவிற்கே மிகவும் கஷ்டப்பட்டோம். அங்கிருந்து எல்லையைத் தாண்டும் பொழுது மிகவும் சிரமப்பட்டோம் ருமேனியா நாட்டு அலுவலர்கள் எங்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து விமானம் மூலம் வருவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் செய்யப்பட்டிருந்தது. அதன் மூலமாக சென்னை வந்திருக்கிறோம். எங்களைத் தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெறிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பயிற்சி விமானி உயிரிழப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்