தமிழகத்தில் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 67ஆயிரத்து 101 இடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கு, ஜுலை 3ஆம் தேதி முதற்கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. இதுவரை மூன்று கட்டமாக பொறியியல் கலந்தாய்வு முடிவுற்றுள்ளது. இதில், பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் உள்ளன.
மொத்தமுள்ள 1 லட்சத்து 67ஆயிரம் இடங்களில், 46 ஆயிரம் இடங்கள் மட்டுமே இதுவரை நிரம்பியுள்ளன. 35 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.15 கல்லூரிகளில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 80 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 212 பொறியியல் கல்லூரிகளில் 10 விழுக்காடுக்கு குறைவாக மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கம்யூட்டர் சயின்ஸ், இசிஇ, மெக்கானிக்கல், சிவில் ஆகிய முக்கிய படிப்புகளிலும் பாதிக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைவு, வேலைவாய்ப்பு இல்லாத சூழல் ஆகியவை இதற்கான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
இறுதியாக நான்காம் கட்டமாக பொறியியல் கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், இதிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேரமாட்டார்கள் என்பதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 1 லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை போதிய அளவு இல்லாததால், 90க்கும் அதிகமான கல்லூரிகளை வரும் காலத்தில் மூட வேண்டிய நிலை ஏற்படும்.