குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, டெல்லி காவலர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களிலும் அச்சட்டத்திற்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள் போராடி வருகின்றன.
திருச்சி: ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று காலை கல்லூரியில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் பகுதி வரை பேரணி சென்றனர். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூய வளனார் கல்லூரி மாணவிகள் இச்சட்டத்திருத்தம், குடிமக்கள் பதிவேடு குளறுபடிகளைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் நடத்தினர். மேலும், இத்திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலக்கரை பகுதியில் வணிகர்கள் தங்களது வர்த்தக நிறுவனங்களை மூடி கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை: குடியுரிமை திருத்தச்சட்டம் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக இருக்கிறது என்று கூறி காவிரி சமவெளி பாதுகாப்பு கூட்டமைப்பினர் தஞ்சாவூர் தொடர் வண்டி நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏரளாமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை: இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் புதிய பேருந்து நிலையம் முன்பு குடியுரிமை திருத்தச் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்: தூய நெஞ்சக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மேலாண்மை குழு தலைவர் சுலைமான், இந்துத்துவாவை கொண்டு வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவு சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய அதிமுக இரு அவைகளிலும் ஆதரவாக வாக்களித்து பாசிச சக்திகளுக்கு துணையாக இருந்துள்ளதாகவும், இனி வரும் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்போம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி கருப்புத் துணி கட்டி பேரணி