சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்பு இடங்களில், கடந்த 17ஆம் தேதி வரையிலும் 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
பி.காம் படிப்பில் சேர்வதற்குத் தான், மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள 40 இடங்களில் சேர்வதற்கு 6200 மாணவர்களும், ராணிமேரிக் கல்லூரியில் உள்ள 60 இடங்களில் சேர்வதற்கு 4500 மாணவிகளும், பி.காம் சி.ஏ., படிப்பில் சேர்வதற்கு கோயம்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 60 இடங்களுக்கு 3400 மாணவர்களும், வியாசர்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு 70 இடங்களுக்கு 3478 பேரும், பி.காம் பாரதி பெண்கள் கல்லூரியில் உள்ள 140 இடங்களுக்கு 3421 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும், பி.எஸ்.சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ’’கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர நடப்பாண்டில் விருப்பம் குறைந்து வருகிறது. மேலும் மாணவர்கள் கற்பித்தல் தொழில் நீண்ட காலம் மற்றும் குறைந்த ஊதியம் கொண்டதாக கருதுகின்றனர். இந்தப் படிப்புகளில் உள்ள மற்ற வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு இந்த மாணவர்களுக்கு அதிகம் தெரிவது இல்லை. நுண்ணுயிரியலில் ஆய்வுக் கட்டுரைகளுடன் முதுகலைப் பட்டம் பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர் மாதம் 8000 சம்பளம் பெறுவதைக் கண்டேன். நம் நாட்டில் ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் இல்லை என்று உணர்வதாக’’ அவர் குறிப்பிட்டு உள்ளார்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக (2023-2024) www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 8ஆம் தேதி காலை முதல் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். நாளை (19ஆம் தேதி ) வரையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டியல் மற்றும் விவரங்கள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் வழி பட்டப்படிப்புகளுக்கு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்வது முதல் சேர்க்கை பெறுவது வரையிலும் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்ட பின்னர், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான குழுவை அமைத்து, தரவரிசைப்படி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என உயர் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.