சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கான மாப்-அப் கலந்தாய்விற்கு 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த மாணவர்களுக்கு ஸ்டே வேகன்சி கலந்தாய்வில் காலி இடங்கள் இருந்தால் அதிலும் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் எம்பிபிஎஸ் படிப்பில் 432 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 968 இடங்களும் காலியாக உள்ளன. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு 16ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் கல்லூரியில் சேரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாப்-அப் கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 2 இடங்கள் என 4 இடங்கள் காலியாக உள்ளன.
19 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 51 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 266 இடங்களும் உள்ளது.
சீனிவாச மருத்துவக் கல்லூரி, ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் ஆகிய தனியார் பல்கலைக் கழங்களில் அரசு ஒதுக்கீட்டில் 12 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 99 இடங்களும் என 432 இடங்கள் காலியாக உள்ளன. பிடிஎஸ் படிப்பில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 52 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 8 இடங்கள் என 10 இடங்களும் உள்ளன.
பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 401 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 505 இடங்களும் என 968 இடங்கள் காலியாக உள்ளன. முதல் மற்றும் 2ஆம் சுற்றுக் கலந்தாய்வில் கலந்துக்கொண்டு இடங்களைத் தேர்வு செய்யாத மாணவர்களும், கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களும் கலந்துக் கொள்ளலாம்.
2023 – 2024 ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேருவதற்கு ஆன்லைன் மூலம் ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரையில் 40ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.
2023-24 ஆம் ஆண்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் 6326 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பில் 1768 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. முதல் சுற்றுக் கலந்தாய்வு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் தரவரிசை எண் 1 முதல் 25ஆயிரத்து 856 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர்.
அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13ஆயிரத்து179 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பதிவு செய்தனர். இவர்களுக்கான இடங்கள் ஆகஸ்ட் 4, 5 ஆகியத் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6ஆம் தேதி கல்லூரியின் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டில் 7612 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1475 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தரவரிசை பட்டியல் ஒன்று முதல் 25856 பெற்ற மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவிற்கு தரவரிசை பட்டியல் ஒன்று முதல்13179 பெற்ற மாணவர்களும் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் பதிவு செய்தனர். ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
இரண்டாம் சுற்று கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 119 இடங்களும், என்ஆர்ஐ மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட 648 இடங்கள் காலியாக உள்ளன. 767 இடங்கள் காலியாக இருந்தது. பிடிஎஸ் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் 85 இடங்களும், மேலும் நிர்வாக ஒதுக்கீட்டில் 818 இடங்களும் காலியாக உள்ளன. 903 காலியாக இருந்தது. முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அனைத்து இடங்களும் நிரம்பியது. நிர்வாக ஒதுக்கீட்டில் என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடத்தில் சேராததால் இருந்த இடங்களில் சேராமல் 82 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் பிடிஎஸ் படிப்பில் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் காலியிடங்கள் எதுவும் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவப்படிப்பில் 156 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 87 இடங்களும் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 7612 மாணவர்களுக்கும், தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 1475 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களில் கல்லூரிகளில் சேராமல் உள்ள காலியிடங்களுக்கு மாப்-அப் கலந்தாய்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: G20 மாநாட்டின் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!