சென்னை: நாமக்கல்லில் பள்ளி மாணவர் தற்கொலை தொடர்பான வழக்கை முடித்து காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நாமக்கல் நீதிமன்ற உத்தரவின் படி வழக்கை தொடர்ந்து நடத்த காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவர் மோகன் ராஜ், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி பள்ளி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், சக மாணவர்கள் தகாத முறையில் பேசியதாலும், தாளாளர் மற்ற மாணவர்கள் முன் அடித்ததாலும், மோகன் ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாமக்கல் சிபிசிஐடி போலீசார், விசாரணைக்கு பின், தற்கொலை எனக் கூறி, வழக்கை முடித்து வைக்க, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை நிராகரித்த நாமக்கல் நீதிமன்றம், வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு தாளாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி தாளாளர் தங்கவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல் குமார், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவனை கவனிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை என்றும், சக மாணவர்கள் பிரச்சினை செய்வது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் அதை தீவிரமாக கருதாமல் அலட்சியமாக இருந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வழக்கை விசாரித்த போலீசாரும் மிக சாதாரணமாக இந்த வழக்கை கையாண்டு உள்ளதாகவும், அத்தனை ஆதாரங்களையும் ஆராய்ந்து, நாமக்கல் நீதிமன்றம் வழக்கை கோப்புக்கு எடுத்து உள்ளதால், இதில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி... அட இவங்களுக்கு உள்ளேயேவா!