ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் மணிகண்டபுரம் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (15). இவர் அம்பத்தூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று திருமுல்லைவாயிலில் உள்ள சிவன் கோயில் தெப்பக்குளத்தில் தனது இளைய சகோதரன் பார்த்திபன், நண்பர்களுடன் குளிப்பதற்காகச் சென்றார்.
குளத்திற்குச் சென்ற அவர் 20 அடி ஆழத்தில் குளித்துள்ளார். அப்போது நண்பர்களுடன் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீச்சலடித்துச் செல்லும்பொழுது நீச்சல் தெரியாததால் கார்த்திக் திடீரென்று நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினார்.
இதைக் கண்ட அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனையடுத்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறை உதவி ஆய்வாளர் வீரராகவன் தலைமையில் ஆவடி தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து மிதவைப்படகு மூலம் கார்த்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் சடலமாகக் கிடந்த கார்த்திக்கின் உடலை ஒரு மணி நேரம் போராடி மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்விற்கு அனுப்பிவைத்தனர். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 6618 பேருக்கு கரோனா!