Video:'என்னை ஏன் சார் அடிச்சீங்க' - தாளாளர் தாக்கியதாக மாணவன் புகார்! - பைக்டர் விங்ஸ் ஏவியேசன் அகடாமி
கிண்டியில் உள்ள விமானபோக்குவரத்து துறை தொடர்புடைய அகடாமியில் பயிலும் மாணவனை தாளாளரை தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னை: கிண்டியில் விமான போக்குவரத்துத் துறை தொடர்பான கல்வி கற்றுத் தரக்கூடிய பைக்டர் விங்ஸ் ஏவியேசன் அகடாமி பெயரில் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அரவிந்த் என்ற மாணவர் பி.எஸ்சி ஏவியேசன் படித்துள்ளார். ஆண்டுக்கு 87 ஆயிரம் ரூபாய் என இரண்டு ஆண்டுகளுக்கு கட்டணம் செலுத்தி தேர்வுகள் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மூன்றாம் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், கல்வியை தொடரமுடியாத நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று(நவ.08) அந்த அகாடமிக்கு சென்ற மாணவர் தான் இறுதியாண்டுத்தேர்வு எழுதவேண்டும் என்று கல்லூரியின் தாளாளர் அலெக்சாண்டரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு இறுதியாண்டுத்தேர்வுகள் முடிந்து 6 மாதங்கள் கடந்துவிட்டதாகவும், இறுதி ஆண்டு தேர்வு எழுத வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். அப்பொழுது தான் கஷ்டப்பட்டுக்கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டணம் செலுத்தியதாகவும், இறுதி ஆண்டுத்தேர்வு எழுதினால் தான் நல்லவேளைக்குச்செல்லமுடியும் எனவும் கேட்டுள்ளார்.
அதற்கு முடியாது என நிர்வாகம் மறுத்த நிலையில், தெரிந்த நபர் ஒருவருக்கு தொலைபேசி மூலமாக போன் செய்து தாளாளரைப் பேச சொல்லிய போது, அவர் அலட்சியப்படுத்தி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் அரவிந்தை அலுவலகத்தை விட்டு வெளியே விரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த அகடாமி சார்பாக அரவிந்த் என்ற இளைஞர் மீது கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அத்துமீறி அலுவலகத்தில் நுழைந்து தாளாளரை அடித்து விட்டதாகவும், தற்காப்புக்காக தடுத்தபோது திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: QS Asia Rankings 2023: சென்னை ஐஐடி, அண்ணா பல்கலை. அசத்தல்!