சென்னை: கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டமானது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.5.2023) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதாவது: ''தமிழ்நாடு பல்வேறு சமூக, பொருளாதார குறியீடுகளில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், ஒரு குறியீட்டில் மட்டும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அது என்னவென்றால், கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்திகரிக்கும்போது, உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை தான். அது குறித்த செய்திகள் நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. அதனைத் தவிர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த அரசுக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் நாம் முன்னணியில் இருக்கிறோம். அப்படியிருக்கும்போது, நம்மால் ஏன் இந்த அவலநிலையை மாற்ற முடியவில்லை என்பதை நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாதாளச் சாக்கடைகளையும், கழிவுநீர்த் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது.
கழிவுநீர்த் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவர்களின் விவரங்களை சமீபத்தில் ஆய்வு செய்தேன். இத்தகைய இறப்புகள் பெரும்பாலும், நகரப் பகுதிகளில் நடைபெறுகின்றன. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது பணியாளர்கள் உயிரிழக்கும் நிலையை மாற்றுவதற்காகத் தான், இப்பணியை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ள கடந்த 20-2-2023 அன்று தலித் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இண்டஸ்ட்ரி என்னும் அமைப்புடன் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என் முன்னிலையில் கையெழுத்தானது.
கடந்த பட்ஜெட் உரையில், இந்தப் பணியில் ஈடுபடுவோர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் பொருட்டு, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” என்ற புதிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, சென்னை பெருநகரப் பகுதியில் நவீன இயந்திரங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி, தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றி, கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினை அடுத்த நான்கு மாதங்களில் முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்தப் புதிய திட்டத்திற்காகக் காத்திராமல், இனிமேல் தமிழ்நாட்டில் எந்தவொரு இறப்பும், கழிவுநீர் சுத்திகரிப்பால் நேரக்கூடாது என்பதை மனதில் கொண்டு, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேரூராட்சித் துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்று இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற நிகழ்வுகளால் உயிரிழப்புகளுக்கான இழப்பீடு வழங்குவதிலும் குற்றவியல் நடவடிக்கைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில இனங்களில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளில், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில இனங்களில் Prohibition of Employment of Manual Scavengers Act சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழும்போது, அவற்றை எப்படி கையாளவேண்டும், என்னென்ன நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும் என்பதற்கு ஒரு நெறிமுறை வகுக்கப்படவில்லை என்பது தெரிகிறது.
இந்த இறப்புகளைத் தவிர்க்கும்பொருட்டு, விரைவில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென்று, கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்தப் பணியில் ஈடுபடுபவர்களிடமும், இப்பணியில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்துவோர்களிடமும், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்படும் நமது மாநிலம், இந்தத் துறையில் மட்டும் பின்தங்கியுள்ளது குறித்து உண்மையிலேயே நான் மிகுந்த கவலை கொள்கிறேன். மேலும், நமது அலுவலர்களும் இத்தகைய பணிகளில் போதிய கவனம் செலுத்தத் தவறிவிடுகிறார்கள் என்றும் நான் எண்ணுகிறேன்.
இனி வருங்காலங்களில், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, அதன் வாயிலாக, இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு இடம் அளிக்காத வகையில் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும், இதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய மனிதநேய உணர்வுடன் இப்பணியில் கவனமாகவும், சிறப்பாகவும் செயல்பட கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குடை தயாரா? கோடை மழை கொட்டப்போகுது! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!