தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக மனுக்களை தாக்கல் செய்தவர்களின் விவரங்களை கேட்டறிந்து எந்தெந்த மனுக்களை ஏற்பது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், தொழில் அமைப்புகள் ஆகியவையும் தங்களை இந்த வழக்கில் இணைக்கக் கோரி மனுதாக்கல் செய்தனர். ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஃபாத்திமா, மக்கள் அதிகாரம் அமைப்பு ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முழு ஆதரவை கொடுத்து வந்த நிலையில் மே 22ஆம் தேதி 13 பேரின் உயிரிழப்புக்கு பின் ஆலையை மூட மாநில அரசு உத்தரவிட்டது.
அதற்கு முன் அரசின் நிலைப்பாடு என்பது மறைமுகமாக ஸ்டெர்லைட் ஆலை இயங்க வேண்டும் என்பதுதான். அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என கடந்த 23 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் மக்கள், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில்கொண்டு சட்ட போராட்டம் நடத்தி வருவதாக வைகோ தெரிவித்தார்.
இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ, ஃபாத்திமா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கில் ஒரு தரப்பு வாதியாக சேர்க்க உத்தரவிட்டனர். அதேசமயம், ஆலைக்கு ஆதராவாக தங்களை இணைக்க கோரிய மக்கள் வாழ்வாதார இயக்கம் சார்பில் பொன்ராஜ், கணேசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.