சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 1) கேள்வி - பதில் நேரத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எல்லைகளை மறு வரையறை செய்ய தமிழ்நாடு அரசு முன்வருமா என எம்எல்ஏ ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரையறை செய்ய அரசு திட்டமிட்டது. ஆனால் குறித்த காலத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டதால் கடந்த ஆட்சி காலத்தில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதை பின்பற்றி அரசு தேர்தலை நடத்தியது.
மக்கள் தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வருங்காலங்களில் தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும்" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், மகன், மகள் ஒரு வார்டிலும் வசிக்கும் நிலை உள்ளது. கூட்டுக்குடும்பமாக வசிப்போர் ஒரே வார்டில் வாக்குப்பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. வார்டு மறுவரையறை செய்யும் போது இதை கவனத்திக் கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "கணவன் மனைவி வெவ்வெறு வார்டில் இருந்தால் அது குடும்பமே இல்லையே. வாக்காளர் பட்டியலில் அப்படி இருக்கும், வார்டு மறுவரையறையில் அப்படி இருக்காது என நினைக்கிறேன். குடும்பம் என்பது சேர்ந்து இருப்பது தான்" என்றார்.
பின்னர் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "ஒரு ஊரில் செல்வாக்கு மிக்க நபர் இருப்பார் என்றால், அவர் ஒரு வார்டில் இருந்து கொள்வார். அவர் மனைவி மற்றொரு வார்டில் நின்று வெற்றி பெறலாம் என்பதற்காக, இப்படி வார்டுகளை பிரித்து வைத்துக் கொள்கின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் தான் இப்படி நடந்துள்ளது. உறுப்பினரின் (ஓபிஎஸ்) கருத்து, குழுவிடம் தெரிவிக்கப்பட்டு சீர் செய்யப்படும்" என கூறினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் குறித்து பரிசீலனை - வருவாய்த்துறை அமைச்சர் தகவல்