சென்னை: திருவல்லிக்கேணி தேவராஜ் முதலி தெருவில் வசிப்பவர் சாந்தி(58). இவரது மகள் திருமணமாகி வியாசர்பாடியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார். சாந்தி வாரம் ஒரு முறை தனது மகளை பார்க்க வியாசர்பாடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சாந்தி தனது மகளை காண புறப்பட்டு சென்றார்.
திருவல்லிக்கேணியில் இருந்து 38 எண் பேருந்தில் டவுட்டன் நோக்கி சென்றார். அப்போது அதே பேருந்தில் குழந்தைகளுடன் ஒரு கும்பல் பயணம் செய்தது. அப்போது ஒரு குழந்தை சாந்தி மடியில் அமர்ந்து கொண்டு அவருக்கு சாக்லேட் கொடுத்து சாப்பிடுமாறு வற்புறுத்தியதால் சாந்தி அதனை சாப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சாக்லேட் சாப்பிட்ட சில நிமிடங்களில் சாந்தி மயக்கம் அடைந்தார். பின்னர் பேருந்து டவுட்டன் வந்தவுடன் அவர் இறங்கினார். ஆட்டோவுக்காக காத்திருந்த நேரத்தில் கழுத்தை பார்த்த போது கழுத்தில் இருந்த 7 சவரன் சங்கிலியைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேரில் காவல்துறையினர் குழந்தையுடன் ஓடும் பேருந்தில் நகையைத் திருடி சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "நான் அவள் இல்லை" - 7 பேரை திருமணம் செய்து மோசடி செய்த 'பலே' பெண்