கடந்த ஆண்டு கோவையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இயக்குநர் அமீர் பேசியது தொடர்பாக அவர் மீது கோவை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக 2018 ஜூன் 21ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, "தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் அமைப்புகள் உருவாகும் நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம்" என, பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி. நாராயணன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மறுநாள் அளித்த புகாரில் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் மீதான விசாரணைக்கு தடைகோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று நடைபெற்றது. திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் முரளி தாக்கல் செய்த அறிக்கையில், நாராயணன் புகார் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகவும், இது தவிர திருவல்லிக்கேணி, வடபழனி காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, பாரதிராஜாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் பின்னர் திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி, ஆய்வாளரும், புகார்தாரர் நாராயணனும் ஆறு வாரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.