இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவிலிருந்து ரேபிட் கிட் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் நீதிமன்றம் வரை சென்று அம்பலப்பட்ட நிலையில், அவற்றைத் திருப்பி அளிப்பதாகச் சொல்லிச் சமாளித்த ஆட்சியாளர்கள், தற்போது 'தெர்மல் ஸ்கேனர்' வாங்குவதில் ஊழல் செய்திருப்பது ஊடகங்கள் வாயிலாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
சென்னையில் கரோனா வைரஸ் தாக்கம் அதிதீவிரம் அடைந்து ஊரடங்கிற்குள் ஊரடங்கு அமல்படுத்தும் நிலையில், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்வற்காக, இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் சீனாவிலிருந்து பிகே58பி என்ற வகையைச் சேர்ந்த 12 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவியை சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.
இந்த தெர்மல் ஸ்கேனர் கருவி இரண்டாயிரம் ஆயிரம் ரூபாயில் தொடங்கி ஐந்தாயிரம் ரூபாய் வரையில் தமிழ்நாட்டிலேயே கிடைக்கின்றன. இருந்தபோதிலும், சீனத் தயாரிப்பு தெர்மல் ஸ்கேனரை இடைத்தரகர்கள் மூலமாக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமென்ன.
அதிக விலை கொடுத்து வாங்கிய தெர்மல் ஸ்கேனர் கருவிகளின் தரம் படுமோசமாக இருக்கிறது என்றும், வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் மாநகராட்சி களப்பணியாளர்கள் யார் யாரைச் சோதனை செய்கிறார்களோ அவர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையையும் இந்த தெர்மல் ஸ்கேனர், ஒரே மாதிரியாக 100 டிகிரிக்கு மேல் காட்டுகிறது என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
மனித உடல் வெப்பநிலையின் சராசரி அளவைக் கடந்து, கடும் காய்ச்சல் உள்ளது போலக் காட்டும் தெர்மல் ஸ்கேனரால், நோய்த் தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகிறார்கள்.
பிளீச்சிங் பவுடர் முதல் பரிசோதனைக் கருவிகள் வரை, இந்தக் கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் ஊழல் செய்து, கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் அதிமுக அரசு, மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருப்பதை இனியாவது நிறுத்தி, இதுவரை நடந்தவை குறித்து, வெளிப்படைத்தன்மையுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்திட வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.