தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி பொதுத்தேர்வை நடத்த வேண்டும் எனப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசியத் தகுதி, நுழைவுத் தேர்வுகளை ரத்துசெய்யாமல், 12ஆம் வகுப்பு தேர்வு மட்டும் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையையும் விளைவிக்கப் போவதில்லை. உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஆகையால் தமிழ்நாடு அரசு மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படாமல், நோய்த்தொற்று கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு எழுத்துப் பூர்வமான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒரு மாத முன் அறிவிப்போடு நடத்த வேண்டும். மாணவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே தேர்வு எழுத வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆசிரியர்களும் இருக்கும் பகுதியிலேயே தேர்வுப் பணிகளை மேற்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பை சரியாகப் பயன்படுத்தி பாதுகாப்பாகத் தேர்வை நடத்த இயலும். மாணவர்கள் குழப்பம் அடையாமல் தங்களின் பயிற்சிகளைத் தொடரும் வகையில், தேதியை பின்னர் அறிவித்தாலும், தேர்வு நடக்கும் என்ற உறுதியான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? - முதலமைச்சர் ஆலோசனை