சென்னை: மயிலாடுதுறையை அடுத்த கூறைநாடு பகுதியைச் சேர்ந்த கல்யாணி மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், "சீனிவாசன் என்பவருடன் இடப்பிரச்சினை தொடர்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சீனிவாசனுடன் கூட்டு சேர்ந்து நாகப்பட்டினம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு பொறுப்பு டிஎஸ்பி டி.சுவாமிநாதன் அறிவுறுத்தலின் பேரில் தன்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தியபோது, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்துவிட்டதாகவும், அதனால் டி.எஸ்.பி. சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த புகாரை நேற்று (மே.11) விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், சிவில் பிரச்சினையில் டி.எஸ்.பி. சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு, மனுதாரர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியது மனித உரிமை மீறல் என நிரூபணம் ஆவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட கல்யாணிக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். இந்த தொகையை டி.எஸ்.பி. சுவாமிநாதனிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியவருக்கு முன் ஜாமீன் மறுப்பு!