சென்னை: அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட 171வது வார்டு பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதாகவும், குழந்தைகள் உள்பட பலர் நாய்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெறி பிடித்த நாய்களை பிடித்து சிகிச்சை அளித்து, தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து வினோத்குமார் என்பவர் மண்டலம்-3 மருத்துவ அலுவலருக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் 15 கேள்விகளை எழுப்பி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், அதற்கு உரிய பதில் கிடைக்காததால் அவர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீடு மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ஜெகதீசன், கால்நடை அதிகாரி டாக்டர் கமால் உசேன், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக இயக்குநர், மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர், மனுதாரர் வினோத்குமார் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
![Rabies attack state commission chennai corporation state commission order to chennai corporation Medicine for street dog street dogs மாநில தகவல் ஆணையம் நாய்களுக்கு உணவுடன் மருந்து நோய்வாய்பட்ட நாய் தெரு நாய் சென்னை மாநகராட்சி தடுப்பூசி நாய்களுக்கு தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-preventiontorabiesattack-script-7204624_29102022174438_2910f_1667045678_1010.jpeg)
அதில், மனுதாரர், தெருநாய்கள் வெறிநாய்களாக மாறி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. பலர் நாட்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். மாநகராட்சி சார்பில், சென்னையில் வெறி பிடித்த நாய்களால் மக்கள் துன்புறுவதாக புகார் வரும்போது அந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசியும் போடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ், “சென்னையில் நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலை பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. பலர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக தெருநாய்கள் கடிப்பதில்லை. அவற்றிற்கு வெறி பிடித்தால் மட்டுமே கடிக்கின்றன.
![Rabies attack state commission chennai corporation state commission order to chennai corporation Medicine for street dog street dogs மாநில தகவல் ஆணையம் நாய்களுக்கு உணவுடன் மருந்து நோய்வாய்பட்ட நாய் தெரு நாய் சென்னை மாநகராட்சி தடுப்பூசி நாய்களுக்கு தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-preventiontorabiesattack-script-7204624_29102022174438_2910f_1667045678_924.jpeg)
தெருநாய்களுக்கு வெறி பிடிக்காமல் பார்த்துக்கொண்டைலே நாய்கடி என்ற பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. தற்சமயம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது அல்லது நாய்களுக்கு நோய் ஏற்பட்டால் மாநகராட்சி மற்றும் புளுகிராஸ் அமைப்பினால் சிகிச்சை அளிக்கப்பட்டு பிடித்த இடத்திலேயே அந்த நாய்களை விடும் நடைமுறை உள்ளது.
சென்னையில் 471 பேருந்து வழித்தடங்களும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்களும் உள்ளன. மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள தெருநாய்களுக்கான மருத்துவம் சார்ந்த பிரச்னையை தீர்ப்பது என்பது நடைமுறை சாத்தியமில்லை. அதேநேரம் தெருநாய்கள் வெறி நாய்களாக மாறுவதை தடுக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகளை கணக்கிட முடியாது.
அதற்கு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் நோய்க்கான மாத்திரை வழங்குவதுதான் தீர்வாகும். வெறி நாய்கடியால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு அதிக பணம் செலவு செய்கிறது. இருக்கிற கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு நாய்களை பிடித்து சிகிச்சை அளிப்பது என்பது இயலாத காரியம். அப்படி செயல்பட்டாலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நாய்களுக்குத்தான் சிகிச்சை அளிக்க முடியும்.
எனவே, மாற்று ஏற்பாடாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழத்தில் கால்நடை மருத்துவம் பயிலும் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் கலந்து மாத்திரைகள் வழங்குதல், காட்டு விலங்குகளுக்கு ஊசி செலுத்துவதுபோன்ற நடைமுறையை பின்பற்றுதல் குறித்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியும், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகமும் மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார்.