சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்டி, எம்எஸ், முதுகலை மருத்துவப்படிப்பில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 11,146 பேர் தகுதியானவர்களாக இருக்கின்றனர். இவர்களில் அரசு மருத்துவர்கள் 1,971 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் சேர்க்கைக்குழு
தமிழ்நாட்டில் உள்ள எம்டி, எம்எஸ், டிப்ளமோ முதுகலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழு பெற்றது.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழு டிசம்பர் மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெற்றது.
23 அரசு மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்களுக்கு தனிதனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முதுகலைப் படிப்பு
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7 ஆயிரத்து 217 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3 ஆயிரத்து 929 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதேபோல் அரசு மருத்துவர்களாக பணியாற்றி வருபவர்களில் முதுகலைப் படிப்பிற்கு 2 ஆயிரத்து 93 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 1,971 மருத்துவர்கள் தகுதிப் பெற்றனர். அதில் பணிக்காலத்தின் அடிப்படையில் 1,815 எம்பிபிஎஸ் மருத்துவர்கள் ஊக்க மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மருத்துவக்கல்லூரி கலந்தாய்வு
எம்டி, எம்எஸ், டிப்ளமோ ஆகியப்படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 1,153 இடங்களும், கே.கே.நகர் ஈஎஸ்இ மருத்துவமனையில் 10 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள் கலந்தாய்வின் போது தெரிவிக்கப்படும்.
தரவரிசைப் பட்டியல்
முதுகலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 19 ஆம் தேதி வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து முதுகலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்விற்கு இன்று (ஜன. 20) மதியம் 12 மணி முதல் 23 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பதிவு செய்து, கட்டணங்களை செலுத்தலாம்.
அதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 26 ஆம் தேதி காலை 8 மணி வரையில் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வுச் செய்யலாம். அதனைத் தொடர்ந்து முதுகலைப் படிப்பில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு இடங்கள் 27 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
28 ஆம் தேதி காலை 9 மணி முதல் முதுகலைப் படிப்பில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு இடங்களையும், உத்தரவுகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய பங்குச்சந்தைகள் மூன்றே நாள்களில் 2,000 புள்ளிகள் சரிவு